நல்லை நகர் நாவலர்

- லாவண்ணியா விமலேந்திரன் -மது நாடு, கடந்த பல நூற்றாண்டுகளாக அன்னிய ஆதிக்கத்தினாலும், அரசியல் குழப்பங்களினாலும் தன் நிலைமையிழந்து சீர்குலைந்து சிறப்புக் குன்றி நிற்கின்றது. நாடு சிறப்பிழக்கும் போது மக்களின் ஆணிவேர் ஆட்டம் காண்கிறது. அப்போது மக்களுக்கு ஆதரவு நல்க, அவர்களை நல்வழி இட்டுச் செல்ல, நிலையிழந்து நிற்காமல், சீர்குலையாமல் வாழ்க்கை நடத்த அவர்களுக்கு வழிகாட்ட இறைவனால் இவ்வுலகுக்கு அனுப்பப்படுபவர்கள் அவதார புருஷர்கள், பெரியோர்கல், தீர்க்கதரிசிகள், மகான்கள் ஆவார்கள். அவர்களின் தேவைகள் மக்களுக்கு மிகவும் அவசியமாகிறது.

ஈழநாட்டு மக்கள் தம் மதத்தை மறந்து மொழியைப் புறக்கணித்து, தேசியப்பற்றைத் துறந்திருந்த காலத்தில் நல்ல ஊராகிய நல்லூரில் 18-12-1822ஆம் ஆண்டு அவதரித்த உத்தம புருஷர் எங்கள் நாவலர், தலைசிறந்தவரென்றால் அது புகழ்ச்சிப் பேச்சல்ல.

அன்று அன்னிய ஆதிக்கம் நம் நாட்டில் வேரூன்றத் தொடங்கியபோது மக்கள் விரும்பாமலே மேலைத் தேச நாகரிகங்கள் திணிக்கப்பட்டன. வியாபாரம் செய்யவென்று கூறி வந்தவர்கள் கலை, கலாச்சாரம், தேசியப்பற்று அனைத்தையும் அகற்றி வந்தனர். மேல் நாட்டிலிருந்து வந்த அனைத்தையும் ஆராயாமல் கைகொட்டி நம்மவரும் வரவேற்றனர். மேல்நாட்டு மோகம் ஏற ஏற தாய்நாட்டுப் பற்று சீர்குலைந்து தமிழ்மொழிமீது வெறுப்பு ஏற்பட்டது. சைவமும் தமிழும் அழிந்து விடுமோ என்று அஞ்சியவேளை, தம் நிலை மறந்து பரிதவித்டு நின்ற இந்நாட்டு மக்களைத் தலைதூக்க அந்தக் காலத்தில் வந்தவரே எங்கள் நாவலர். அஞ்சிக் கொண்டிருந்த காலத்தில் அவதரித்ததனால் போலும் ஆறுமுகம் எனப் பெயரிட்டனர் பெற்றோர். அஞ்சுமுகம் தோன்றில் ஆறுமுகம் தோன்றாதா?

விளையும் பயிரை முளையிலேயே தெரியும். மிகச் சிறுவயதிலேயே பெரிய பல நூல்களையெல்லாம் மகாவித்துவான் சேனாதிராசா, சரவணமுத்துப் புலவர் முதலியோரிடம் கற்றுத் தெளிந்த எங்கள் ஆறுமுக நாவலர், பீற்றர் பேர்சிவல் பாதிரியார் பாடசாலையில் ஆங்கிலம் கற்றார். இப்பாடசாலைதான் இக்காலத்து யாழ்ப்பாண மத்திய கல்லூரி எனச் சொல்கிறார்கள்.  இவரது 9 ஆம் வயதிலே தந்தையார் விட்டுச் சென்ற பாடலைப் பூர்த்தி செய்தாரென்றால் அன்னாரின் விவேகம்தான் என்னே!

ஆங்கில அறிவைச் சொல்லிக் கொடுத்த பேர்சிவல் பாதிரியார் இவரின் கல்வி அறிவைக் கண்டு வியந்து போனார். இவரின் அறிவின் அபாரசக்தியைக் கண்டு மெச்சினார். அதுமட்டுமா? எங்கள் நாவலரிடமே தமிழ் கற்க வேண்டும் என ஆசைப்பட்டார். வெள்ளைக்கார பாதிரிக்கு - தன் குருவுக்கு - தமிழ் மொழி கற்பிக்கும் ஆசான் ஆகினார் என்றால் அவரின் ஆற்றலை என்னென்று சொல்வது? அவரின் கல்வித் திறனைக் கண்ட பாதிரி தமது பாடசாலையில் நாவலரை ஆசிரியராக அமர்த்திக் கொண்டார். அதுமட்டுமல்ல. விவிலிய நூலைத் தமிழில் மொழிபெயர்க்கும் பொறுப்பையும் நாவலரிடம் ஒப்படைத்தார். முதன்முதலில் விவிலிய நூலைத் தமிழில் மொழிபெயர்த்தவர் எங்கள் நாவலர்தான் என்ற பெருமையையும் பெற்றுக் கொண்டார்.

நாவலர் மதப்பற்று கொண்டவர். ஆனால் ஏனைய மதங்களிடம் குறை காணவில்லை. ஒரு மதத்தை நிந்தனை செய்து மற்ற மதத்தை வளர்ப்போரை மட்டும் காரணம் காட்டி குற்றம் சுமத்தினார். மதமாற்றத்தை வன்மையாகக் கண்டித்தார். அதற்குத் தூண்டுகோலாக இருந்தவர்களைத் தனது சொல்லமுகளால் சவுக்கடி கொடுக்க மறக்கவில்லை. மதமாற்றத்தை வெறுத்தாரே தவிர - மதங்களை அவர் வெறுக்கவில்லை. இந்து மதம் போலவே ஏனைய மதங்களையும் மதித்தார். விவிலிய நூல் மொழிபெயர்ப்பே இதற்கு உதாரணமாகும். தன் கடன் பணி செய்வதே எனத் தொண்டாற்றியவர் நாவலர் என்பதை யாரும் மறுக்கமாட்டார்கள். அவராற்றிய அரும்பெரும் சேவைகளையெல்லாம் நாவலர் காலக் கண்ணாடி போட்டுப் பார்த்தால் தான் நமக்குப் புரியும். தான் பிறந்த மதம், தாய்மொழி, தேசியத் தொண்டு அனைத்துக்கும் தன்னைத் தியாகம் செய்த அவதார புருஷர் நம்நாட்டில் இருந்தார் என்றால் அது நிச்சயம் நாவலர்தான்.

பாடசாலையில் ஆசிரியராக இருந்தபோதும் மதத்தின் பேரால் நாடும் மொழியும் சுரண்டப்படுவதைக் கண்டு கொதித்தவர் நாவலர். நாடும் மொழியும் எக்கேடும் கெடட்டும். நாங்கள் சம்பளத்துக்கே வேலை செய்வோம் என எண்ணும் இக்காலத்தவர்க்கு அக்கால நாவலர் சரித்திரம் ஒரு நல்ல பாடம்தான்.

தேசியப் பாடசாலைகள் நிறுவுவது, பத்திரிகைகள் நடத்த அடிகோலுவது, இனிய தமிழ் நூல்களை வெளியிடுவது, செய்யுள் நூல்களை வசன நூலாக்குவது, பிரசங்கம் செய்வது எனப் பல பணிகளைத் தாமே மேற்கொண்டார். தாமெ அரும்பாடுபட்டு நைட்டிகப் பிரமச்சாரி விரதம் பூண்டு பெரும் பணியாற்ற முயற்சித்தார். யாழ்ப்பாணத்திலும், சென்னையிலும் அச்சகங்களை நிறுவி நூல்கள் பல வெளியிட்டார். தமிழ் வசன நடையில் ஒரு மறுமலர்ச்சியை உண்டு பண்ணியதால் அறிஞர் வி. கோ. சூரியநாராயண சாஸ்திரிகளால் 'வசன நடை கைவந்த வள்ளலார்' எனப் பாராட்டப்பட்டார். சைவப் பிள்ளைகள் சைவப் பாடசாலைகளிலே படிக்க வேண்டும் என்ற விருப்புக்கொண்டு செயலாற்றியவர். யாழ்ப்பாணத்திலும், சிதம்பரத்திலும் இரு கலாசாலைகளை நிறுவினார். நாவலரின் பாலபாடங்களுக்கும், வசன நடைக்கும் ஒரு தனி மதிப்பு இன்றும் இருக்கிறது. என்றும் இருக்கும்!

எமது சைவ ஆலயங்கள் சீர்பெற அரசாங்கம் ஆவன செய்ய வேண்டும் எனத் துணிவுடன் கூறி உழைத்தார். கேதீஸ்வரமும், கோணேஸ்வரமும் எமது தேசியச் சொத்து என எடுத்தியம்பியவர் ஆறுமுகநாவலர். ஆங்கிலப் புலமை பெற்றிருந்தும், தமிழில் தன் பணிகளைத் திரிகரண சுத்தியோடு செய்தவர் நாவலர். இவர் ஆங்கில மொழியில் பணியாற்றியிருந்தால் ஆங்கில உலகமும் இவரைப் போற்றியிருக்கும். தமிழ் மீதிருந்த பற்றினால் - சைவத்துக்கும் தமிழுக்குமாகவே வாழ்ந்தார்.

இலங்கைச் சுதந்திரத்துக்கு வித்திட்ட அரசியல்வாதிகளில் முதலிடத்தை வகிக்கும் இராமநாத வள்ளலுக்குச் சட்டசபை செல்ல ஆதரவளித்து மேடை மேடையாகப் பேசியவர் நாவலர். இதன் மூலம் நாட்டின் சுதந்திரத்துக்கு அடிகோலியவர்களுள் நாவலரும் ஒருவரென்றால் வெறும் பேச்சல்ல. சேர் இராமநாதன் சட்டசபையில் என்ன கூறினார் தெரியுமா? "The Champion Reformer of Hindus Arumuganavalar" (வீறுகொண்டு வெற்றிக்கொடி நாட்டிய இந்து சீர்திருத்தக்காரர் ஆறுமுகநாவலர்). என்னே இப்பெரியாரின் தீர்க்கதரிசனமும் சொல்லும் செயலும்!

ஒருமுறை வழக்கொன்றில் சாட்சியமளிக்க நாவலர் அழைக்கப்பட்டார். நீதிபதி வெள்ளைக்காரர் என அறிந்து ஆங்கிலத்தில் பேசினார். வெண்ணீறு அணிந்தவரிடம் ஆங்கிலம் தங்கு தடையின்றி வந்ததைக்கண்ட நீதிபதி பொறாமைப்பட்டுக் கொதித்தார். தமிழில் பேசு என்றார். நாவலர் நல்ல செய்யுள் ரூபமாக தூய தமிழில் சாட்சி சொன்னார். மொழிபெயர்ப்பாளரால் மொழிபெயர்க்க முடியவில்லை. தடுமாறினார். நீதிபதி வெட்கித் தலைகுனிந்தார்.

நாவலரின் சேவைகளையும், நாவன்மையையும் கண்டு திருவாவடுதுறை ஆதீனம் நாவலர் என்னும் பொருத்தமான பட்டப்பெயர் கொடுத்து கௌரவித்து மகிழ்ந்தது. நாவலரின் வாழ்க்கை எப்போதும் சேவை, சேவை என்றே சென்றது. என் கடன் பணி செய்து கிடப்பதே. நாமார்க்கும் குடியெல்லோம் என முழங்கிய நாவுக்கரசர் வழிவந்தவரல்லவா?

இறுதியாக எங்கள் நாவலர் ஒரு சீர்திருத்தவாதி பெரும் அறிஞர். அறிவுக் களஞ்சியம், ஆண்மையின் பொக்கிஷம், அன்னியரின் அட்டூழியங்களை அடக்க வந்த அவதார புருஷர். சித்தாந்தச் சொற்கண்ட பிரசங்க பேரறிஞர். நூல்கள் பதிப்பதில் திறமை கண்டவர். தமிழ் இலக்கிய மறுமலர்ச்சியின் திறவுகோல். தீர்க்கதரிசனத்துடன் தொண்டாற்றிய தீரர்.

நாவலர் இன்னும் சில காலம் வாழ்ந்திருந்தால்...

பல அரிய சேவைகளைச் செய்திருப்பார். நாவலர் வாழ்க்கை வரலாறு வெரும் கட்டுக் கதையல்ல. நமது யாழ்ப்பணத்தில் தோன்றிய ஒரு பெருமகனாரின் உண்மைச்சரித்திரம். இன்று கலங்கி நிற்கும் இலங்கைத் தமிழ் மக்களுக்கும் நாவலர் வாழ்க்கை தன்மானமுடன் வாழ வழிகாட்ட வேண்டும்.

"நல்லை நகர் ஆறுமுகநாவலர் பிறந்தில ரேற்

சொல்லு தமிழெங்கே"

Written by: Laavannya Vimalendran, Colombo

Home Page Arumuga Navalar's home page Yogaswami's Page

Return to Top